இத்தாலி தலைநகர் ரோமில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டதோடு, ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டை கொண்டாடினர்.
இந்தநிலையில் புது வருட நாளன்று அதிகாலையில் ரோம் நகரில் காரில் சென்று கொண்டிருந்த ஒருவர், சாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நூற்றுக்கணக்கான பறவைகள் செத்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் அதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த பதிவில் “நண்பர்களே, நூற்றுக்கணக்கான பறவைகள் செத்து மடிந்து கிடக்கின்றன. இதை பார்ப்பதற்கு சங்கடமாகவும், நம்ப முடியாததுமாக உள்ளது. நாம் வெடித்த பட்டாசுகளே இதற்கு காரணம்” என அவர் வேதனை தெரிவித்தார்.
இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சர்வதேச விலங்கு பாதுகாப்பு அமைப்பு, பறவைகள் சாவுக்கு பட்டாசுகளே காரணம் என குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் லோரொடானா டிக்லியோ கூறுகையில் “பறவைகள் அதிக பட்டாசு சத்தத்தால் பயந்து இறந்திருக்கலாம். திடீரென்று பட்டாசு வெடிக்கும்போது பறந்து கொண்டிருக்கும் பறவைகள் சத்தத்தில் நிலைகுலைந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்; சுவர்கள், ஜன்னல்கள், மின் இணைப்புகளில் மோதிவிடும்; மாரடைப்பால் கூட இறந்து போகக்கூடும்” என்றார்.