வங்கி களுக்கான எரிபொருள் ஹெட்ஜிங் கொடுப்பனவுகள் தொடர்பான மோதலை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கடந்த நவம்பரில் வங்கிகளுக்கான எரிபொருள் ஹெட்ஜிங் கொடுப்பனவுகளை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம், உலகச் சந்தையில் எரிபொருள் விற்கப்படும் விலைக்கமைய பெற்றோலின் சில்லறை விற்பனை விலையையும் இடைநிறுத்திவைக்கும் பணிப்புரையை விடுத்திருந்தது.
அத்துடன், பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஜந்த டி மெல் ஆகியோரையும் இடைநிறுத்தி வைக்கும் பணிப்புரையை விடுத்திருந்தது. ஆனால், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. “இதனால் இடைநிறுத்தஉத்தரவும் முடிவுக்கு வந்துள்ளது. அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து விட்டனர். விபரத்திற்காக நான் காத்திருக்கின்றேன்’ என்று அமைச்சர் பௌசி இது தொடர்பாக ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்தார். இந்த வழக்கை வர்த்தகர் ஒருவரும் சில எதிரணி அரசியல்வாதிகளுமாக தாக்கல் செய்திருந்ததாகவும் அதனை முன்கூட்டியே அவர்கள் வாபஸ்பெற முன்வந்ததாகவும் வழக்கறிஞர்கள் கூறினர். “நீதிமன்ற வழக்கு விசாரணைகளை பிரதம நீதியரசர் முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இதன் விளைவாக சகல இடைக்கால உத்தரவுகளும் செயலிழந்துவிட்டன’ என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உதித்த எகலாஹேவ தெரிவித்தார்.