“அரசு சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னரான சூழலில் நாட்டின் சிவில் நிர்வாகத் துறையில் முப்படைகளையும் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பலர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். நாட்டின் பாதுகாப்புத்துறை தவிர்ந்த வெளிவிவகாரம், சுகாதரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவ்விதமான படை அதிகாரிகள் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் என்று பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் நடைமுறைச் சாத்தியமாக்கலாம் அல்லது அவர்களுடன் பணியாற்றுவது தனக்கு இலகுவானது என்று கருதமுடியும். அதற்காக, சிவில் நிர்வாகத்தில் மேலும் மேலும் படை அதிகாரிகளை இணைத்துக் கொள்கின்றமையாது நாட்டில் படைத்துறையை மையப்படுத்திய நிர்வாகமொன்று விரைவில் ஏற்படும் அபாயத்தினை உருவாக்குவதாகவுள்ளது.
விசேடமாக, கொரோனா நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு, முப்படைகளின் தளபதி தலைமயிலான தேசிய செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொண்டாலும் அதன்பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமித்தமை தற்போது மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்தமை பெரும் அச்சத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே இவ்விதமான சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டியது அவசியமாகும்” என்றார்.