கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு இமாம் கொமெய்னி நிதி நிறுவனத்தால் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான ஈரான் நாட்டு தூதுவர் மஃமூத் றகிமி கோஜி கல்முனை மாநகர முதல்வர் எச். எம். எம். ஹரீஸிடம் உறுதியளித்துள்ளார்.
ஈரான் தூதுவர் மஃமூத் றகிமி கோஜிக்கும், கல்முனை மாநகர முதல்வர் எச். எம். எம். ஹரீஸ¤க்கும் இடையே நேற்று முன்தினம் (27) ஈரானிய தூதுவராலயத்தில் ஒரு மணிநேரம் இச் ந்திப்பு இடம் பெற்றது. இச்சந்திப்பின் போது கல்முனை மாநகரத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பற்றி முதல்வர் உயர் ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தினார்.
இலங்கையுடனும், ஜனாதிபதியுடனும் ஈரான் கொண்டுள்ள தொடர்புகளுக்கும் ஈரான் இலங்கைக்கு வழங்கி வரும் அபிவிருத்திசார் உதவிகளுக்கும் தனது மகிழ்ச்சியை தெரிவித்த கல்முனை முதல்வர் கிழக்கு மாகாணம் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் கல்முனை மாநகர பிரதேசத்தில் காணப்படும் கைத்தொழில்துறை, விவசாயம், மீன்பிடி என்பனவற்றின் முன்னேற்றம் பற்றியும் முதல்வரினால் எடுத்துக் கூறப்பட்டது. புலிகள் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு தற்போதைய அரசியல் சூழல், கிழக்கு மாகாண நிர்வாக செயற்பாடுகள், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கல்முனை முதல்வர் ஈரான் தூதுவருக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.
கல்முனை மாநகர சபை ஏற்பாடு செய்துள்ள கலாசார பெருவிழா மார்ச் மாதம் முதல்வாரத்தில் நடைபெறவு ள்ளது. இவ் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள் ளுமாறு கல்முனை மாநகர முதல்வர் ஈரானிய உயர் ஸ்தானிகருக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். இக் கலாசாரப் பெருவிழாவில் ஈரான் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஈரான் நாட்டுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வழங்கும் உதவித் திட்டத்தில் ஈரான் கிராமிய மின் திட்டங்களுக்கு கூடுதல் உதவி புரிகின்றது. இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்களுக்கும் இம்மின்சாரத் திட்டத்தை விஸ்தரிக்க வேண்டுமெனவும் கல்முனை முதல்வர் கோரிக்கை விடுத்தார்.