காயமடைந்த சிவிலியன்களை விடுவிக்க புலிகள் மறுப்பு பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகிறது – கெஹலிய

kkhaliya.jpgவன்னியில் காயமடைந்துள்ளதாகக் கூறப்படும் 320 சிவிலியன்களை சிகிச்சைக்காக வவுனியாவிற்குக் கொண்டு வருவதைப் புலிகள் தடுப்பதானது பாரிய சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நேற்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது :-

வன்னியில் யுத்தத்தினால் காயமடைந்தவர்கள், நோயாளர்களென 320 பேர் புதுக்குடியிருப்பு அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை வவுனியாவிற்குக் கொண்டுவந்து சிறந்த முறையில் சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் ஐ. நா. அதிகாரிகள் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் மற்றும் படைத்தரப்பு அதிகாரிகள் பலரும் வன்னிக்குச் சென்றுள்ளனர்.  இறுதி நேரத்தில் அந்த நோயாளிகளை ஒப்படைக்க புலிகள் மறுத்துவிட்டனர். அரசாங்கம் உச்ச அளவில் சிகிச்சை வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே காயமடைந்தோரை அழைத்துவர தீர்மானித்தது.

அப் பகுதியில் பல சிவிலியன்கள் காயமடைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் சிவிலியன்களா அல்லது பயங்கரவாதிகளா என எப்படி இனங்காண்பது? ஆயுதத்தைக் கீழே வைத்தால் புலிகளும் சிவிலியன்கள்தானே? இவர்கள் சிவிலியன்கள் என ஒரு அரச சார்பற்ற அமைப்பினருக்கு எவ்வாறு இனங்காண முடிந்தது?

எந்த சிவிலியன்களை இலக்கு வைத்தும் படையினர் தாக்குதல் நடத்தவில்லை. எனினும் சில ஊடகங்கள் இது பற்றி அங்குள்ள டாக்டர்கள் தமக்குத் தகவல் தந்ததாகத் தெரிவிக்கின்றன. ஊடகங்களின் தகவலின்படி அத்தகைய பெயருடைய எவரும் அரசவைத்தியர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த டாக்டர்கள் தகவல் தெரிவிக்கையில்:-

இராணுவத்தினரே இம்மக்களைச் சுட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். டாக்டர்கள் எவ்வாறு இப்படி கூற முடியும். இவர்கள் புலிகள் அமைப்பின் டாக்டர்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஒரு டாக்டர் எப்படி யுத்த நிலைமை சம்பந்தமாக விளக்கமுடியும்? எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கேள்வியெழுப்பினார்.
இத்தகைய விடயங்கள் தொடர்பில் தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் கவனமாகச் செயற்படுவது அவசியம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *