“வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகத் இம் மாதம் 23ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் திறக்க தீர்மானித்துள்ளோம்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முழு சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது என இன்று (06.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரசன்னரணதுங்க தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
“சுமார் 10 மாதங்களுக்கு பிறகு கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் வணிக விமானச் சேவைகளுக்குத் திறக்கப்படவுள்ளது. ஜனவரி 23 ஆம் திகதியாகும் போது வணிக விமான போக்குவரத்துக்கள் சிறிது சிறிதாக வழமைக்குத் திரும்பும்.
விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் நிறுவனங்கள் கட்டாயம் சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் கடைப் பிடிக்கத் தவறும் பட்சத்தில் அவர்களுக்குப் பயணிகளை அழைத்துவர அனுமதி வழங்கப்படாது.
மார்ச் 19 ஆம் திகதி விமான நிலையங்கள் மூடப்பட்டன. அன்றிலிருந்து நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பக் கடந்த ஜூன் மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சுற்றுலாத்துறைக்குப் பயணிகள் மத்தியில் நல்ல கேள்வி நிலவுகின்றது.
அதனால் ஜனவரி 23 ஆம் திகதியாகும் போது விமான நிலையங்களைத் திறக்க உள்ளோம். தற்போது விமான நிலையங்களை மீள திறப்பதற்குள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.