“டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுகிறார்” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார்.
எந்தவித ஆதாரங்களையும் வழங்காமல் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையில் ஜோர்ஜியா மாகாணத்தில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை தயார் செய்ய மாகாண உள்துறை மந்திரியை டிரம்ப் மிரட்டும் காணொளி பதிவு வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில் ஜோர்ஜியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு போட்டியிடும் 2 ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜோ பைடன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் ஜனாதிபதி டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுவதாக காட்டமாக கூறினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், டிரம்ப் ஏன் இன்னும் ஜனாதிபதி பதவியை விரும்புகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் வேலை செய்ய விரும்பவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினை குறித்து புலம்புவதிலும், புகார் கூறுவதிலும் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்றார்.
இதற்கிடையில் ஜனாதிபதி பதவியை தக்கவைக்க நரகத்தை போல போராடுவேன் என கூறியுள்ள டிரம்ப், ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்வில் சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பை உறுதிப்படுத்த இந்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது, குடியரசு கட்சி எம்.பி.க்கள் அதனை நிராகரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.