இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. வரும் 13ம் திகதி தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பிரியங்க் கார்கேவும் தடுப்பூசி மருந்து அனுமதி குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
அவசரகால பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால் முதலில் பிரதமரே போட்டு பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏன் மக்கள் மீது அதை சோதித்துப் பார்க்க வேண்டும்? என கார்கே கூறி உள்ளார்.
பிரதமர் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பீகார் காங்கிரஸ் தலைவர் அஜித் சர்மாவும் கூறி உள்ளார்.
புத்தாண்டில் இரண்டு தடுப்பூசிகள் கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் இது குறித்து மக்களிடையே சந்தேகம் உள்ளது. ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் தடுப்பூசி மீதான சந்தேகத்தை போக்க, தலைவர்கள் தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துக்கொண்டனர். அதேபோல் பிரதமர் மோடியும், பாஜக மூத்த தலைவரும் முதல் தடுப்பூசியை போட்டு, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என அஜித் சர்மா கூறி உள்ளார்.