“400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் 122 ஆவது ஜனன தினம் நேற்று(08.01.2021) அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,
எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்க நாட்டில் புதியதொரு யுகத்தை உருவாக்கிய தலைவர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். சுமார் 400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டி நாட்டு மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுத்ததில் அவர் முக்கிய பங்கினை வகிக்கின்றார்.
1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்க அரசாங்கத்தை மக்கள் தமது அரசாங்கம் என்று கருதினர். 3 வருடங்கள் குறுகிய காலத்திற்குள் அவர் பல சேவைகளை ஆற்றியுள்ளமையின் காரணமாகவே இன்றும் மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர்.
அவர் தலைமையிலான முற்போக்கான அரசியல் கட்சி நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. மனிதனொருவனின் பிரதான கடமை பிரிதொரு மனிதனுக்கு சேவையாற்றுவது என்பதே அவரது கொள்கையாகும். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்கவின் வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையிலேயே சர்வதேசம் இலங்கையின் மீது அவதானம் செலுத்தியது.
இவரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சிறிமாவோ பண்டாரநாயக்கவும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். அவரது முற்போக்கான அரசியல் முன்னெடுப்புக்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் மாத்திரமின்றி முற்போக்கு சிந்தனையுடைய அனைவராலும் தொடர்ந்தும் பின்பற்றப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது “தற்போதும் நான் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்அதனை ஒரு வருடத்திற்கு முன்னரே நான் கூறினேன். தற்போது கட்சியின் தலைவராக இருப்பவர் சட்டவிரோதமாகவே உள்ளார்.” எனவும் அவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.