“இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று நாடு சுதந்திரம் பெற்று 61 வருடங்களாகிய போதிலும் தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழி தெரியாமையும் சிங்கள மக்களுக்கு தமிழ் மொழி தெரியாமையினாலேயே நாடு இன்று யுத்தகளமாக மாறியுள்ளது. இந்த நிலைமையை மாற்றி அமைப்பதற்கு எமது எதிர்காலச் சந்ததியினரான இன்றுள்ள சிறார்களுக்கு மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்ளக் கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’.
இவ்வாறு கடந்த சனிக்கிழமை அம்பாறை ஆரியபவன் உல்லாச விடுதி மண்டபத்தில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான கற்கை நிலையம் ஏற்பாடு செய்திருந்த உரிமைகள் தொடர்பான பயிற்சி முகாமில் விரிவுரை நிகழ்த்திய கண்டி மாவட்ட உயர் நீதிமன்றத்தின் அரச சட்டத்தரணி நவரெத்தின மாரசிங்க தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
“ஊடகவியலாளர்கள் மனித உரிமைகள் பற்றி போதுமான அறிவைப் பெற்றுக்கொள்வதை மையமாக வைத்தே இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் , இது தொடர்பான கை நூல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அத்துடன் சட்டங்கள் தொடர்பான விடயங்களும் இந்தப் பயிற்சியின் போது வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.