“பல்கலைகழக தீர்மானத்துக்கு அமையவே நினைவுத்தூபி இடிக்கப்பட்டது ” – இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட விடயத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என இராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமை குறித்து இராணுவத்தின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தனியார் ஊடகமொன்று வினவிய போதே, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு எதுவும் இல்லையெனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு அமையவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சிக்கலுக்குரிய சம்பவங்களின் போது பொலிஸாருக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்தால் மாத்திரம் தம்மால் தலையீடு செய்ய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்தவொரு விதத்திலும் தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பாக பல்கலைகழக துணைவேந்தர் எஸ்.சற்குணராஜா குறிப்பிடுகின்ற போது , “யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்று நிருபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.

எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

 

தகவல் மூலம் – ஐ.பி.சி தமிழ்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *