யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் அவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று(08.01.2021) இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தமை மற்றும் கலகம் விளைவித்தனர் என்று இரண்டு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டன.
மாணவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், நடந்தவற்றை மன்றுரைத்து பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
இரு தரப்பினரது விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், மாணவர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். வழக்கு தவணையிடப்பட்டது.