வடமாகாண ஆளுநரின் உப அலுவலகம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வவுனியா மன்னார் வீதியில் உள்ள அரச சுற்றுலாவிடுதியில் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது. ஆளுநர் சரத்சந்திர டிக்ஸன் தலா வைபவரீதியாக அலுவலகத்தை திறந்துவைத்ததுடன் மாகாண அமைச்சின் செயலாளர்களுடன் உயர்மட்ட கலந்துரையாடலையும் நடத்தினார்.
வடக்கின் ஐந்து மாவட்டங்களுடைய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக முக்கிய வேலைத்திட்டங்கள் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோடியாக அவசர தேவையாகவே உப அலுவலகம் வவுனியாவில் திறக்கப்பட்டுள்ளது. மற்றும் பொதுமக்கள் தமது தேவைகளை கவனிக்க நீண்ட தூரம் பயணம் செய்து திருகோணமலைக்கு செல்லவேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் இந்த உப அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. வடக்கே வசந்தம் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதமாக நடைபெறவேண்டும் என்பது ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து செல்வோம் என ஆளுநர் இங்கு பேசும்போது குறிப்பிட்டார்.
வாரத்தில் இரு தினங்கள் உப அலுவலகத்தில் சகல மாகாண அமைச்சுகளுடைய செயலாளர்களும் பிரசன்னமாகி இருப்பார்கள் என மாகாண பிரதம செயலாளர் எஸ்.இரங்கராசா தெரிவித்தார். வவுனியா மாவட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தலைவர் செபமாலை திரைவீரசிங்கம் மற்றும் உறுப்பினர்கள் தேசநிர்மாண அமைச்சின் இணைப்பாளர் பி.சுமதிபால ஆகியோரும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.