வன்னியில் குறுகிய நிலப்பகுதியில் தொடர்ந்து கடும் சமர் நடைபெற்று வருகையில் அங்கு பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜேக் மே டயோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்;
விடுதலைப்புலிகளின் இறுதிப் பிரதேசமாகிய ஒரு சிறிய நிலப்பரப்பு மீது இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக இறந்தவர்களினாலும் பெரும் எண்ணிக்கையில் காயமடைந்தவர்களினாலும் வன்னிப் பிரதேசத்தின் வைத்திய நிலையங்கள் யாவும் நிறைந்து வழிகின்றன.
மக்கள் மோதல்களில் சிக்கியிருக்கிறார்கள். வைத்தியசாலைகளும் அம்புலன்ஸ்களும் தாக்குதல்களுக்கு இலக்காகியிருக்கின்றன. காயமடைந்த சிவிலியன்களை மீட்க முயன்ற உதவிப் பணியாளர்கள் பலரும் காயமடைந்திருக்கிறார்கள். சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரின் பணிகள் அங்கு நிலவுகின்ற வன்முறைச் சூழலினால் தடைப்பட்டிருக்கின்றன. பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ள பொதுமக்களுக்குப் பாதுகாப்பு, வைத்திய கவனிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தேவையாகவுள்ளது. பெரும் மோதல்கள் இடம்பெறுகின்ற 250 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடத்தில் இரண்டரை இலட்சம் பேர் சிக்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு ஒதுங்கியிருப்பதற்குப் பாதுகாப்பான இடமில்லை. அங்கிருந்து தப்பியோடவும் முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்பட்டு சிவிலியன்கள் பாதுகாக்கப்படாவிட்டால் எல்லாம் ஓயும் போது எண்ணற்றவர்கள் பாதிக்கப்பட்டு மோசமான ஒரு மனிதாபிமான நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. நேரம் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இரத்தம் சிந்துவதைத் தடுத்து நிறுத்துவதற்காக உறுதியான முடிவெடுக்க வேண்டிய நேரமாக இருக்கின்றது.
மோதல் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் சுயமாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதுடன், அதற்கான வசதிகளையும் செய்ய வேண்டும் என மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு கேட்டுக் கொள்கின்றது. முடிந்த அளவு காலத்திற்கு சர்வதேச செஞ்சிலுவைக் குழு வன்னியில் இருப்பதற்குத் தீர்மானித்துள்ளது. ஆனால், அதனுடைய பிரசன்னத்தையும் அதன் பணிகளையும் இரு தரப்பினரும் மதித்துச் செயற்பட வேண்டும்.
வன்னிப் பிரதேசத்தினுள்ள மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் கூறுகின்ற படி மனிதாபிமான பணியாளர்களும் அவர்களது இடங்களும் ஷெல் வீச்சுகள், கொள்ளைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். சண்டைகளிலும் மோதல்களிலும் நேரடியாகப் பங்கு கொள்ளாதவர்களின் உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என இரு தரப்பினரும் வலியுறுத்தப்படுகின்றார்கள்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா வைத்தியசாலைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் அவசர மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட வேண்டியிருக்கின்றது. நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைக்குழு வன்னியிலுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குத் தனது உதவிகளை வழங்கி வருகின்றது. அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினருடைய உடன்பாட்டுடன் கடந்த நான்கு மாதங்களாக வன்னியில் நிரந்தரமாக இருந்து செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு நிறுவனமாகிய சர்வதேச செஞ்சிலுவைக் குழுவானது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.