மோதல் களில் காயமடைபவர்கள் குறித்து செய்தியை வெளியிடும் போது ஊடகங்கள் சரியான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் ஊடகவியலாளரின் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடுவதுடன், நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதால் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டுமென அமைச்சரும் பாதுகாப்பு ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். மீள்கட்டுமாணமென்ற பெயரில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் புலிகளுக்கு உதவி செய்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களுக்கு ஒரு ரூபா கூட தொண்டு நிறுவனங்கள் செலவளிக்கவில்லையென்று முல்லைத்தீவை கைப்பற்றியதையடுத்து நிரூபணமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்; புலிகள் சிறிதளவிலான பகுதியில் முடக்கப்பட்டுள்ளனர். அங்கு காயப்படுபவர்கள் மற்றும் சுகவீனமடைபவர்கள் புலிகள் நிலைகொண்டுள்ள புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் மேலதிக சிகிச்சையை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையுள்ளது.
இவர்களுக்கு மேலதிக அவசர சிகிச்சையை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் இராணுவ கட்டுப்பாட்டு எல்லைக்கு கொண்டுவந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கையெடுத்தோம். இதன்படி செவ்வாய்க் கிழமை சர்வதேச செஞ்சிலுவை குழு மற்றும் ஐ.நா. உதவியுடன் அம்புலன்ஸ் மற்றும் வசதிகளை வழங்கி இராணுவத்தினர் வசமுள்ள முன்னணி நிலையில் தயாராயிருந்தனர்.
ஆனால், நோயாளர்கள் வரமாட்டார்கள் என்று தகவல் வந்தது. அவர்களைப் புலிகள் தடுத்து விட்டதாகவும் அந்நோயாளர்கள் அரைவாசி பேரும் வந்து திரும்பிவிட்டனர். சில ஊடகங்கள் 300 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக அப்பகுதியிலுள்ள ஊடகவியலாளரை ஆதாரமாகக்கொண்டு செய்தி வெளியிடப்படுகின்றது. ஊடகங்கள் மூலம் செய்திவெளியிடுபவர் சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்படாதவர். அவர் படையினர் எத்திசையிலிருந்து தாக்குவதாகவும் கூறுகின்றார். அவர் வைத்தியராக இருக்கின்ற நிலையில், எவ்வாறு எத்திசையிலிருந்து யார் சுட்டதென்று தெரிவிக்கமுடியும். வைத்தியராக இருப்பவருக்கு எவ்வாறு ஆய்வு செய்து தெரிவிக்க முடியும்.
எனவே ஊடகங்கள் சரியான மூல ஆதாரங்களைக் கொண்டு செய்தி வெளியிட வேண்டும். இவ்வாறு சரியான ஆதாரமற்ற செய்தி வெளியிடுவதால் நம்பிக்கைத் தன்மை அற்றுப் போவதுடன், நாட்டிற்கும் பாதகமாக அமைவதால் இதனை உணர்ந்து ஊடகவியலாளர் செயற்பட வேண்டும். இதேவேளை, கடல்கோள் அனர்த்த மீள்கட்டுமானம் தொடர்பில் விமர்சனங்கள் அரசிற்கு எதிராக எழுந்தன. மீள் கட்டுமானம் அரசினூடாகவல்ல நேரடியாக மேற்கொள்ள வேண்டுமென சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்தன.
முல்லைத்தீவில் கடல்கோள் மீள் கட்டுமானத்திற்கு செயற்பட்ட இவ்வாறான நிறுவனங்கள் ஒரு வீட்டைக் கூட நிர்மாணிக்கவில்லை. அந்நிறுவனங்கள் அம்மக்களுக்கு ஒரு ரூபாவையோ அல்லது ஒரு டொலரையோ செலவிடவில்லையென்பது இன்று நிரூபணமாகியுள்ளது. இந்நிலையிலேயே நாம் ஒரு வருடத்திற்கு முன்னர் அங்குள்ள நிறுவனங்கள் செலவிடும் கணக்குகளை காண்பிக்க வேண்டுமென தெரிவித்தோம். இதற்கு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் சர்வதேச உறவுகள் வீழ்ச்சியடையுமென்று தெரிவித்து விமர்சனம் செய்தனர். அன்று நாம் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமாகியுள்ளது.
குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்கள் நேரடியாக புலிகளுக்கு உதவியுள்ளதை அறியக் கூடியதாகவுள்ளது. குறிப்பாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தை நாம் தடைசெய்தது போல் உலக நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவருக்கு காலம் பிந்திய ஞானம் ஏற்பட்டுள்ளது. இப்போது தான் அவர் பாதுகாப்புப்படையினருக்கும் இராணுவத் தளபதிக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் நாம் எடுத்த தீர்க்கமான முடிவினால் இந்நிலை எட்டப்பட்டதென ஊடகவியலாளரின் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்தார்.