மேல் மாகாண சபை நேற்று நண்பகல் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தலை மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான வெளியிட்டார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளிவரவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கலைக்கப்பட்டுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தல் சம்பந்தமான முடிவுகளை தேர்தல் ஆணையாளர் பின்னர் அறிவிப்பார். இது தொடர்பில் மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான தெரிவிக்கையில், நேற்று நண்பகல் 12 மணிக்கு மேல் மாகாண சபை கலைக்கப்பட்டதாகவும் இதற்கான தேர்தல் நடத்துவது தொடர்பில் கட்சித்தலைவர்கள் கூடி ஆராய்ந்த பின் அதற்கமைய தேர்தல் ஆணையாளர் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பாளர் என தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கமையவே மேல் மாகாண சபையைக் கலைக்கத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த அவர், மேல் மாகாண சபை நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். விரைவில் ஊவா மற்றும் தென் மாகாணமும் கலைக்கப்படலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.