தற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் படையினர் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி, மூன்று சிறிய தற்கொலைத் தாக்குதல் படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை காலை உடையார்கட்டுக்குளம் பகுதியில் தேடுதல் நடத்திய விஷேடப் படையணி 3 இவற்றைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் படையினர் இதுவரை காலமும் நடத்திய தாக்குதலின் போது மேற்கொண்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இவையெனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கட்டுமானப்பணிகள் பூர்த்தியடையாத நிலையிலுள்ள இந்த நீர்மூழ்கி 35 அடி நீளமானதும் கவசத் தகட்டினால் உருவாக்கப்பட்டு வருவதுமாகும்.
இதைவிட இந்த நீர்மூழ்கியைத் தாங்குவதற்கும் அதனை இடத்திற்கிடம் நகர்த்துவதற்குமான சக்கரங்கள் பூட்டப்பட்ட “ரெயிலர்’, கவசத்தகடுகள், ஒட்டுவேலைக்கு பயன்படுத்தப்படும் பாரிய சிலிண்டர்கள், ஒவ்வொன்றும் 20 அடி நீளமான 30 கவசத்தகடுகள், மிதித்துச் செல்லக்கூடிய வகையை சேர்ந்த மூன்று தற்கொலைத்தாக்குதல் படகுகள், டோறா வகையைச் சேர்ந்த வேகத்தாக்குதல் படகொன்றும் பெருமளவு நீரிறைக்கும் கருவிகள் (வாட்டர்பம்), இரு லொறிகள், இரு பஸ்கள், ஒரு ட்ரக், அதிசக்தி வாய்ந்த ஒரு ஜெனரேற்றர், வாட்டபவுசர், இழுவை வண்டி, ஒரு பவுசர், மண்ணெண்ணெய், இரு பெரிய லேத்மெசின்கள், சக்தி வாய்ந்த இரு கொம்புறசர்கள், ஓட்டும் இயந்திரம், ஒரு தொகுதி மின்சார மோட்டார்கள், மிகப்பெரியதொரு உயர்த்தி (ஜய்க்), பலபடகுகள், வாகன இயந்திரங்கள், மிகப்பெரியதொரு கட்டிடம், குளிரூட்டப்பட்ட சிறியரக வீடுகள் 15 என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் நீருக்கடியிலான ஆயுத வகைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்ட முதலாவது அமைப்பாக விடுதலைப் புலிகளே இருப்பது தெரியவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.