வன்னியில் மோதலில் சிக்கி படுகாயமடைந்திருக்கும் 50 சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கான இரண்டாவது முயற்சிக்கு ஐ.நா திட்டமிடுவதாக பி.ரி.ஐ.செய்திகள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள் அனுமதியளித்தும் மோதல்கள் தணிவடைந்துமிருந்தால் வியாழக்கிழமை (நேற்று) நண்பகல் எல்லைப்பகுதியை தாண்டி வாகனங்கள் காயமடைந்தவர்களை ஏற்றிவரும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கிமூனின் பேச்சாளர் கூறியுள்ளார். அதன்பின் காயமடைந்தவர்கள் வவுனியாவிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்க முடியுமெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
காயமடைந்தவர்களை ஏற்றிவரச் சென்ற வாகனங்கள் புதுக்குடியிருப்பில் பல நாட்களாக நிற்கின்றன. சுமார் 2 1/2 இலட்சம் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பரின் பின் சுமார் 5 ஆயிரம் பேர் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணை அலுவலகம் கூறியுள்ளது.
யுத்தம் இடம்பெறும் பகுதிகளிலிருந்து 2 1/2 இலட்சம் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பான் கிமூன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் நிவாரணப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிகளவு முன்னுரிமை கொடுக்குமாறு விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் அவர் அழைப்புவிடுத்திருந்தார்.