அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோன்பைடன், பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ், முப்படை தளபதி மைகல் முல்லான் ஆகியோர் இராணுவத் தலைமையகமான பெண்டகனில் முக்கிய கூட்டமொன்றில் பங்கேற்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான் சம்பந்தமாக மிகச் சிக்கலான முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக பராக் ஒபாமா பாதுகாப்பு தலை மையகமான பென்டகனுக்கு வந்தார்.
உப ஜனாதிபதி ஜோன் பைடன், பாதுகாப்பு அமைச்சர் றொபேர்ட் கேட்ஸ், முப்படைத் தளபதி மைக்கல் முல்லான் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒபாமா சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆப்கானிஸ்தான், ஈராக் விடயங்கள் பற்றியே முக்கிய கவனமெடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு மேலதிகப் படைகள் அனுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை மைக்கல் முல்லான் ஜனாதிபதி பராக் ஓபாமாவிடம் எடுத்து விளக்கினார். இதற்குத் தீர்வாக ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படைகளை மீளப்பெறுவதென்ற தீர்மானத்துக்கு பராக் ஒபாமா வந்தார். படைகளை 16 மாத காலத்துக்குள் ஈராக்கிலிருந்து வெளியேற்றுவது என்ற ஒபாமாவின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் கவனமாக உள்ளபோதும் அமெரிக்காவின் நலன்களை முன்னிறுத்தியே படை விலக்கல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஈராக்கிலிருந்து படைகளை முற்றாக வெளியேற்றுவதா அல்லது கட்டம் கட்டமாக அழைப்பதா என்பதில் இன்னும் முடிவில்லை. எனினும் மிகக் குறுகிய காலத்துள் படைகள் விலக்கப்படவுள்ளன. சுமார் 36 ஆயிரம் படைகள் விலக்கப்பட்டு அவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என ஒபாமாவின் பேச்சாளர் சொன்னார். உலகெங்கும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மனச்சோர்வடைந்துள்ளது எமக்குத் தெரியும். பொதுமக்கள் அமெரிக்க இராணுவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் படை விலகல்கள் அமையவுள்ளன.
அது எம்மையும் எமது தாய்நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பென பராக் ஒபாமா சொன்னார். அத்துடன் அமெரிக்காவின் அதிகாரங்களை நிலை நிறுத்தவும் அமெரிக்காவுக்கு களங்கம் உண்டுபண்ணவும் இராணுவப் பலமே தூண்டுகோலாகவுள்ளமை தனக்குத் தெரியும் எனவும் ஒபாமா சொன்னார்.
நேட்டோப் படைகளின் சில செயற்பாடுகளால் பொதுமக்கள் பலியாவதும், கற்பழிக்கப்படுவதும் அமெரிக்காவுக்கு கெட்ட பெயர் உண்டு பண்ணியதையும், சில நாடுகளில் படைகள் விலக்கப்பட்டால் தீவிரவாதம் பலமடைவதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.
ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகளின் தளபதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படை அதிகாரிகளுடன் பராக் ஒபாமா கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஈராக்கில் உள்ள படைகளை மிக விரைவாக வாபஸ் பெறவேண்டுமென்ற எண்ணத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா செயற்பட்டார்.
ஆனால் அங்குள்ள படை அதிகாரிகள் தற்போது வழங்கிய தகவல்களால் சற்று ஆழ்ந்து யோசனை செய்வதாக அவரது உரையிலிருந்து புலனாகின்றது. 2008ம் ஆண்டுடன் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென பக்தாத் – வாஷிங்டன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபோதும் பின்னர் 2011ம் ஆண்டுவரை பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் திருத்தப்பட்டமை தெரிந்ததே. இதனால் ஈராக்கில் உள்ள படைகளை அவசரமாக வெளியேற்ற வேண்டுமென்ற அழுத்தத்தை ஒபாமா வழங்கவில்லை.