அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். இராணுவத்தால் இசை முழங்க ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஆர்லிங்டன் தேசிய கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து வெள்ளை மாளிகையில் தனது பணிகளை ஜோ பைடன் தொடங்கினார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே தனது பதவிக் காலத்தின் முதல் அரசாங்க ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் அறையிலிருந்து ஜோ பைடன் தனது அமைச்சரவை நியமனங்கள் மற்றும் சில பரிந்துரைகளை, துணை அமைச்சரவை அளவிலான பாத்திரங்களுக்கு முறைப்படுத்தினார். பதவியேற்பு தொடர்பான பிரகடனத்திலும் பைடன் கையெழுத்திட்டார்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் புகைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐநா சபையின் முயற்சியால் பாரிஸ் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் முதலில் கையெழுத்திட்ட அமெரிக்கா பின்னர் விலகியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது உள்பட பல நிர்வாக நடவடிக்கைகளில் அவர் பின்னர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களில், பரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக நடவடிக்கைகளில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.