“நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சியின் குரல் இருக்க வேண்டும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று(22.01.2021) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான வேலைத்திட்டங்களைத் தயாரிக்காது தடுப்பூசி தொடர்பாக அரசு கதைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், தடுப்பூசியை வழங்கிய பின்னர் பிரச்சினை முடிந்துவிடும் என்று எண்ணிவிட முடியாது.
தடுப்பூசியைக் காட்டி மக்களை ஏமாற்றாது, கொரோனாவைத் தடுப்பதற்கு முறையான வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவது தொடர்பாக முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை நாட்டுக்கு அரசு வெளியிட வேண்டும்.
இலங்கையில் மக்கள் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் குரலாக ஐக்கிய தேசியக் கட்சியின் குரல் இருக்க வேண்டும் – என்றார்.