“நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு புறம்பாக செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும்” என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(22.01.2021) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காதி நீதிமன்றம் நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள வேளையில் காதி நீதிமன்றுக்கான தொழில் நியமனங்களுக்கான வெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை தவறான செயற்பாடாகும்.
காதி நீதிமன்றம்,மதரஸா பாடசாலை , முஸ்லிம் விவாக சட்டம் குறித்து பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகள் வெறும் தேர்தல் பிரசாரமாகவே காணப்படுகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணாக காதி நீதிமன்றம் செயற்படுகிறது. ஒரு இனத்திற்கு மாத்திரம் நீதிமன்றம் செயற்படுவது பொதுச்சட்டம் அவசியமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் வாழும் ஏனைய மக்களும் மதத்தை அடிப்படையாக கொண்டு நீதிமன்றங்களை உருவாக்கிக் கொண்டால் பொதுச்சட்டத்துக்கு யார் அடிபணிவது? காதி நீதிமன்றம், மத்ரஸா பாடசாலை குறித்து கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுவடைவதற்கான சூழலையே கடந்த அரசாங்கம் ஏற்படுத்தியது.இதன் தாக்கம் ஏப்ரல்21 குண்டுத்தாக்குதலுடன் வெளிப்பட்டது.
நாட்டில் இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படகூடாது என்பதற்காகவே இஸ்லாமிய அடிப்படையாவாதத்தின் கொள்கைகள் வேறூன்றும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம். காதி நீதிமன்றம் குறித்து எதிர்வரும் பாராளுமன்றில் உரையாற்றவுள்ளேன். மத்ரஸா பாடசாலைகள் குறித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை அரச தலைவர்களுக்கு மீண்டும் நினைவுப்படுத்துவது அவசியமாகும்.
நாட்டின் பொதுச்சட்டத்துக்கு அனைத்து இன மக்களும் அடிபணிய வேண்டும்.காதி நீதிமன்றத்துக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் எதிர்ப்புக்கள் தோன்றியுள்ளன. ஒரு நாடு-ஒரு சட்டம் என்ற கொள்கையினை செயற்படுத்துவதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலிலும்,பொதுதேர்தலிலும் பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய மக்களின் எதிர்ப்பார்ப்பும் அதுவாகவே உள்ளது.
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு புறம்பாக செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே தற்போதைய அரசாங்கத்துக்கும் ஏற்படும் என்றார்.