யுத்தத்தின் வெற்றியை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்டுத்தி ஜனநாயக விரோதச் செயற்பாடுகளிலும் மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது என்று ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) குற்றம் சாட்டியுள்ளது.
ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்றகோட்டேயிலுள்ள சோலிய மண்டபத்தில் நடைபெற்ற போது குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது; அரசாங்கம் ஜனநாயக விரோதப் பாதையில் தற்போது பயணிக்கின்றது. அதாவது, நாட்டின் அரசியலமைப்பை மீறி செயற்பட்டு வருகின்றது. யுத்த வெற்றியைக் காட்டியே அரசு இவ்வாறு ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றது.
பயங்கரவாதிகளை அழித்து நாட்டை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமான அதேவேளை இந்த சூழ்நிலையில் எவ்விது காரணமும் இன்றி இரண்டு மாகாண சபைகளைக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை அரசுக்கு இல்லை. இதனை செய்வதற்குக் காரணம் தமது எதிர்காலம் குறித்த அச்சமேயாகும். தமது ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக இவ்வாறு இரண்டு மாகாண சபைகளை கலைத்துத் தேர்தலை நடத்துவதால் மக்களின் பணம் வீண்விரயம் செய்யப்படுகின்றது.
மக்களின் நலனைக் கருத்துதில் கொள்ளாது அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகையை வழங்காது தான் தோன்றித் தனமாக தேர்தலை நடத்தி பணத்தை வீண்விரயம் செய்கின்றது. பெற்றோலின் விலையை உயர் நீதிமன்றம் 100 ரூபாவாகக் குறைக்குமாறு கோரியது. இதனால், 517 கோடி ரூபா நட்டமேற்படுமென அரசு தெரிவித்து அதனை கைவிட்ட நிலையில் ஹெஜ்ஜிங் உடன்படிக்கை மூலம் 8 ஆயிரம் கோடிரூபா நட்டம் ஏற்பட அனுமதியளித்துள்ளது. ஆட்சியாளர்கள் இலாபத்திற்காகவே செயற்படுகின்றார்களே தவிர மக்களின் நன்மைக்காகவல்ல.