புலிகளின் தற்கொலைப் படகு ஒன்றை கடற்படை படகுகள் நேற்றுக் காலை தாக்கியழித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு வடக்கே கரையோரத்தை அண்மித்த பிரதேசத்தில் நேற்று அதி காலை 3.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடற்படையின் கடுமையான தாக்குதல்களில் புலிகளின் தற்கொலைப் படகு வெடித்துச் சிதறி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் அந்த படகிலிருந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். முல்லைத்தீவு வடக்கு கரையோரத்தை அண்மித்த கடற்பரப்பில் புலிகளின் தற்கொலைப் படகு ஒன்று செல்வதை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் அவதானித்து கடற்படையின் அதிவேக தாக்குதல் மற்றும் டோரா படகுகளைப் பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
தற்பொழுது அந்தப் பிரதேசத்தில் கடற்படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, புலிகளின் விநியோகங்களையும், புலிகள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் வடக்குக் கரையோர பிரதேசம் மற்றும் கடற்பரப்பில் கடற்படையினர் நான்கு தடை வலயங்களை ஏற்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்த கடற்படைப் பேச்சாளர், முதலாவது, இரண்டாவது தடை வலயங்களில் கடற்படையின் துரித செயலணி, விசேட படகு அணி, அதிவேக தாக்குதல் படகுகளும், மூன்றாம், நான்காம் தடை வலயங்களில் பீரங்கி படகுகளும், கரையோர காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.