இலங்கை அரசு பிரபாகரனை பிடித்தவுடன் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரனை இந்தியாவில் வைத்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா பேசுகையில்,
எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். சிலர் அதை கூட விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வந்தால் தான் வலி தெரியும். ஒரு தொலைக்காட்சியில் இலங்கை எம்.பி ஒருவர் இங்குள்ள தமிழர்களை தூண்டும் விதத்தில் பேசுகிறார். உண்மையான அக்கறை இருந்தால் இலங்கையில் இருந்து போராட வேண்டியது தானே. தமிழகத்தில் அமைதியை கெடுப்பதற்காக அப்பாவிகளை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முதல் குற்றவாளியான பிரபாகரனை இன்னும் கைது செய்யவில்லை. அவரை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை இங்கு வைத்து விசாரிக்க வேண்டும். இப்படி நாங்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை, இந்தியாவில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் வரை காங்கிரஸார் ஓய மாட்டார்கள்.
இலங்கையி்ல் அப்பாவி தமிழர்கள் பலியாகும் பிரச்சினையை ஒரு காரணமாக வைத்து சிலர் தேசிய தலைவர்களை அவமதித்து வருகிறார்கள். அவர்களை கைது செய்து அரசியல் நாகரீகத்தை ஏன் காப்பாற்றவில்லை என்று இங்கு நான் கேட்க கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் என்றால் எதுவும் பேசலாம் என்று நினைக்க வேண்டாம். சாது மிரண்டால் காடு கொள்ளாது. எங்கள் கட்சி 125 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ஆனால் கட்சி தொடங்கி 6 ஆண்டு ஆகாதவர்கள் எங்களை எதிர்க்கிறார்கள். நாங்கள் செய்த நன்றிகளை மறந்தது ஏன்? என்றார் அவர்.