இலங்கையில் வடபகுதியில் இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற மோதல்களில் அகப்பட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களின் நிலை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவியான நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். பல மாதங்களாக தொடரும் மோதல்களும், பல தடவைகள் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும், மடுமையான மழை மற்றும் வெள்ளமும் அங்கு மக்களுக்கு மிகுந்த ஆபத்தான நிலைமை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மோதல் பகுதிகளில் இருந்து தப்ப முற்படும் மக்கள் ஒன்றில் தடுக்கப்படுவதாகவோ அல்லது அவர்களது விருப்புக்கு மாறாக சிறப்பு மையங்களில் தடுத்து வைக்கப்படுவதாகவோ செய்திகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் மோதலில் ஈடுபடுகின்ற இருதரப்பினர் மீதும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையர், மோதலில் அகப்பட்டுள்ள மக்களின் நலன்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.