கடந்த 12 மாதங்களில் இலங்கையில் தண்டனையின்மையை ஆழப்படுத்துதல், அரசாங்கத்தின் ஒரு பகுதியாக அதிகரித்துவரும் இராணுவமயப்படுத்தல், இனவாத தேசியவாத கருத்துகள், சிவில் சமூகத்தினர் அச்சுறுத்தல் போன்ற போக்குகள் அதிகரித்துக் காணப்படுகின்றன என இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து தெரிவிக்கும் ஐ.நா.வின் அறிக்கையை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கை குறித்த கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும், மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான வலுவான தீர்மானம் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பாதை கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கொள்கைகளும் நடைமுறைகளும் மீண்டும் உருவாவதற்கு வழிவகுக்கின்றது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையை நாங்கள் அவதானமாக ஆராய்கின்றோம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளுக்கு இன்றே மதிப்பளிப்பதும், கடந்த கால விவகாரங்களைக் கையாள்வதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் இலங்கையின் எதிர்காலத்திற்கு முக்கியமான விடயம் என அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.