கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றமையால், கொரோனாத் தடுப்பூசி ஆரம்ப நிகழ்வில் தன்னால் பங்கேற்க முடியவில்லை எனச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவால் வழங்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசியை முதலில் சுகாதாரப் பிரிவுக்கும், பாதுகாப்புப் பிரிவுக்கும் வழங்க கிடைத்தமையை எண்ணி தான் மகிழ்ச்சி அடைகின்றார் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்ததன் ஊடாக, கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் வலுவடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி, கொரோனாத் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தைத் தான் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்திருந்தார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பவித்ரா வன்னியாராச்சி, ஹிக்கடுவ பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதைத் தொடர்ந்து, அவர் இரத்மலானை பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.