இலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களில் இருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இலங்கை அரசு அறிவித்துள்ள 48 மணிநேர கால அவகாசம் குறித்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் வெள்ளியன்று விவாதிக்கப்பட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து வந்ததன் விளைவாகவே இந்த அறிவிப்பு வந்துள்ளது என்றும், இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோதலில் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா பீட்டர் அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சார்பாகப் பேசியவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பைத் தாங்கள் ஏற்கவில்லை என்று கூறினர். ஆளும் திமுக சார்பில் பேசிய நிதியமைச்சர் க.அன்பழகன், இலங்கை அரசின் அறிவிப்பை ஏற்று அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குள் செல்வதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.