வலி.வடக்கு பிரதேச செயலக குழுவின் தீர்மானத்தை உதாசீனம் செய்து 100 அடி புத்தர் சிலைக்கான அடிக்கல் நட்டார் இராணுவ தளபதி !

காங்கேசன்துறை பகுதியில் தனியார் காணியொன்றில்  100அடி உயரமான விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லை  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நட்டுள்ளதாக இராணுவத்தின் இணையதள பகுதி மூலமாக அறிய முடிகின்றது.

வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட தையிட்டி கிராமத்தில், 8 பேருக்குச் சொந்தமான தனியார் காணி இன்னமும்  விடுவிக்கப்படவில்லை. அந்தக் காணியில் 2019ஆம் ஆண்டு இராணுவத்தினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அதற்கு எதிராக காணி உரிமையாளர்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். விடுவிக்கப்படாத இந்தக் காணிக்குள் நேற்றைய தினம்(30.01.2021) திஸ்ஸ ராஜமகா விகாரையை நூறு அடியில் அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபையின் பதிவேடுகளுக்கு அமைவாக அந்தப் பகுதியில் போருக்கு முன்னர் திஸ்ஸ ராஜமகா விகாரை என்ற ஒன்று அமைந்துள்ளது. ஆனால் அந்தக் காணியை விடுத்து தனியாருக்குச் சொந்தமான காணியிலேயே விகாரகைக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது என்று வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் நேரில் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.

பௌத்தசாசன அமைச்சின் நிதி உதவியுடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த விகாரைக் கட்டுமானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த ஆனந்த தேரவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வலி.வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருந்தது. வலி. வடக்கில், விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்குள் அனுமதி பெறாமல் விகாரைகள் அமைப்பதற்கு தடை விதிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்போதும் இணைத் தலைவர் அங்கஜன் அதனை மறுத்து அனுமதி பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தார்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரத்துக்குள்ளேயே அதனை உதாசீனம் செய்யும் வகையில், திஸ்ஸ ராஜமகா விகாரைக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *