துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சு ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தொழிற்சங்கங்கள் இறுக்கமான தீர்மானத்தில் உள்ளனர்.
கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை நிறுத்துமாறு கோரி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் நேற்று தொடர்ந்த நிலையில், அது அரசுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது.
இந்தநிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, துறைமுகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று முக்கிய பேச்சில் ஈடுபட்டுவுள்ளனர்.
இதன்போது “கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று (01) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்தது.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே,
குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். பிரதமர் எமக்கு வழங்கிய உறுதிமொழி நாளைய தினம் நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம். குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரையில் நாம் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நாளைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வௌியான பின்னர் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்படும். குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் வேறு விடயங்கள் இருந்தால் எமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடமாட்டோம்´. என தெரிவித்ததுள்ளார்.