ரஷ்யாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி , கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நச்சு தாக்குதல் காரணமாக நவால்னி கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ந் திகதி நவால்னி ரஷ்யா திரும்பினார். மாஸ்கோ விமான நிலையம் வந்த அவரை மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் போலீசார் கைது செய்தனர். நவால்னி கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் நவால்னியை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வார இறுதியில் ரஷ்யாவில் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் பரோல் விதிமுறை மீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நவால்னியை விடுவிக்க கோரியும் ஜனாதிபதி புதின் பதவி விலகக்கோரியும் கடந்த 2 நாட்களாக ரஷ்யாவில் எதிர்க்கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் இருக்கும் மாஸ்கோவின் லுபியங்கா சதுக்கத்தில் முதலில் போராட்டம் நடத்த நேற்று நவால்னி ஆதரவாளர்கள் அழைப்பு விடுத்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் போராட்டம் அருகில் உள்ள தெருக்களுக்கு மாற்றப்பட்டது. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஆயிரக்கணக்கானோர் புதின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இது சம்பந்தமான வீடியோவும் வெளியானது. ரஷ்யாவின் மற்றொரு பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்துக்கு அணி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டங்களை ஒடுக்குவதற்காக தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த நகரங்களை பாதுகாப்பு படையினர் முடக்கினார்கள். மேலும் அங்கு போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ரஷ்யாவில் அமைதியாக போராடும் போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ரஷ்ய அதிகாரிகள் செயல்படுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அவரது கருத்தை ரஷ்யா நிராகரித்தது. ரஷ்யாவில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் நிலைமையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாகவும், ரஷ்யாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாகவும் ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.