“எங்கள் தமிழ் மொழிக்கும், மதத்துக்கும், முக்கியத்துவம் கொடுக்காத  இலங்கையை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது” – மனோ கணேசன்

“எங்கள் தமிழ் மொழிக்கும், மதத்துக்கும், முக்கியத்துவம் கொடுக்காத  இலங்கையை சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும்” என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிட்டிருந்த நிலையில் இது தொடர்பாகவும் இலங்கையின் சுதந்திரதினம் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கம் போதே மணோகணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதமாம். இறுமாப்பாகச் சொல்கின்றார்கள். தமிழில் பாடினால் மட்டும் அதனால், தமிழ் பேசும் இலங்கையர் வீடுகளில் தேனும், பாலும் ஓட போவதில்லை. இதன்மூலம் குடி எழும்பியும் விடாது. குடி முழுகியும் விடாது. ஆனால், நாட்டை ஒன்றுப்படுத்த கடவுள் தந்த, ‘ஒரே மெட்டு, ஒரே அர்த்தம்’ கொண்ட இரண்டு தேசிய கீதங்களையும் கூட ஒருசேர பாட முடியாத அளவில் இவர்கள் இனவாதத்தில் ஊறிப் போய் உள்ளார்கள்.

மேலை நாடுகளிலும் இனவாதம், நிறவாதம் இருந்தாலும், வெள்ளை இனவாதிகளுக்கு எதிராக, கறுப்பு அமெரிக்கர்களுக்கு ஆதரவாக, ‘கறுப்பு உயிர் கனதியானது’ என்று சொல்லி போராட, கோடிக்கணக்கான வெள்ளையர்களே அந்நாடுகளில் உள்ளார்கள்.

அமெரிக்கா உட்பட்ட மேலை நாடுகளில் இனவாதம் தோலின் நிறத்தில் உள்ளது. இலங்கையில் இங்கே அது ஆன்மாவில் ஊறியுள்ளது.

முன்னாள் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் என்ற முறையில், நான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரிடம் கடைசி நிமிட அழைப்பாக, “இலங்கைத் தாயைப் போற்றும், தமிழிலான தேசிய கீதத்தையும் பாடி, தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பி, நாம் முன்னோக்கிச் செல்வோம். அதன்மூலம், நாமும் இந்த நாட்டுக்கு உடைமையானவர்கள் என்ற உணர்வை தமிழ் பேசும் சுமார் ஐந்து மில்லியன் இலங்கையர்களின் மனங்களில் ஏற்படுத்துவோம் என்று நேற்று கூறியிருந்தேன்.

ஆனால், இவர்களைத் திருத்த முடியவில்லை. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வளவு அடி வாங்கினாலும், திருந்தா ஜன்மங்கள். பல வர்ண பூக்கள் நிறைந்த பூங்கா எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை உணர தெரியாத பிற்போக்குவாதிகள். உலகமே அந்தந்த நாடுகளில், பல்லின, பன்மத, பன்மொழி அடங்கிய பன்மைதன்மைகளை கொண்டாடி மகிழும், இவ்வேளையில், இவர்கள் நாட்டைப் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றார்கள்.

எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை என இவர்களுக்கு உணர்த்துவோம்.

65 வருடங்களுக்குப் பிறகு, கடந்த எமது நல்லாட்சியில், நாம் முன்னின்று போராடி பெற்ற, தமிழ்த் தேசிய கீதம் பாடும் உரிமையை, இடைநிறுத்தி விட்டு, இவர்கள் கொண்டாடும் சுதந்திர நிகழ்வுக்கு, எமக்கு விடுக்கப்பட்ட அழைப்பை  நாம் ஏற்கமாட்டோம். எமது இருப்பிடங்களில் நாம் எமது சுதந்திர உணர்வைக் கொண்டாடுவோம். தமிழ்மொழிக்கு உரிய மரியாதையை தராத இலங்கை முழுமையான இலங்கை நாடல்ல.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத, இன அடிப்படைகளில் தூரத்தள்ளி வைத்து, இரண்டாம், மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தும் இன்றைய அரசுக்குள்ளே அடைக்கலம் புகுந்து, இந்த இனவாத அரசுக்கு ஒரு ஏற்புடைமை ஏற்படுத்தி கொடுக்க முயலும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *