மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிங்கள குடும்பங்களை குடியேற்ற முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களை ஒன்றுதிரட்டி அதற்கு எதிராக போராடவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பிழையான நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக்கூடாது.மாவட்ட அரச அதிகாரிகள் நேர்மையாக செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொல்பொருள் செயற்பாடுகள் சந்திரிகா ஆட்சிக்காலத்திலேயே தொடங்கப்பட்டதாகவும் மகிந்த ஆட்சிக்காலத்தில் அது கடுமையாக முனைப்பு பெற்றதாகவும் நல்லாட்சியிலும் அது முன்னெடுக்கப்பட்ட போது தங்களின் எதிர்ப்பு காரணமாக அது நிறுத்தப்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் சந்திரகாந்தனின் தொகுதியில் முன்னெடுக்கப்படும் இந்த சட்ட விரோத குடியேற்றத்தினை தடுக்க அவர் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.