யாழ். உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்குத் தீர்மானம்

வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றுவருகின்ற உண்ணாவிரதம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. வழமைபோல் நேற்றுக் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் ஆரம்பமானது.

உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகின்ற இடத்திற்கு நேற்றுக் காலை வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம், மதகுருமார்கள், அருட்சகோதரிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் நேற்று உண்ணாவிரதத்தில் பங்குபற்றினர்.

உண்ணாவிரதப் போராட்டம் இன்றிலிருந்து விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இன்று சனிக்கிழமை யாழ்.குருநகர் புதுமை மாதா ஆலயத்திலும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும் இவ் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வகுப்புப் புறக்கணிப்பும் ஊழியர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டமும் நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது. இதனால், மாணவர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களின் வரவின்றி பல்கலைக்கழக வளாகம் வெறிச்சோடியிருந்தது.

பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் விரிவுரைகள் மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களின் பரீட்சைகள் என்பன நடைபெறாததோடு நிர்வாக வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *