தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவை கோரி நாளை முடங்குகிறது மலையகம் !

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் கோரி நாளை ஐந்தாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி, தொழிற்சங்கம், வர்க்க, இன, மத, பேதமின்றி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளின் பல தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற நிலையில் நாளைய தினம் மலையகம் முடங்கும் என ஹட்டனில் இன்று (04.02.2021) நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒன்று கூடினோம். அதில், சகல ஆசிரியத் தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தனர்.

சிங்கள ஆசிரிய தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.

கம்பனிகள் தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளனர். ஆகவே, நாங்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாட்டில் ஏனைய பிரதேசங்களில் ஒரு பிரச்சினை வரும்போது ஹர்த்தலாக நடத்தி அந்தப் பிரச்சினையினை வெற்றி கொள்கின்றனர். ஆனால், மலையகத்தில் அவ்வாறான ஒரு நிலை காணப்படுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆசிரியர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் நாயகம் எஸ்.டி.நாதன் கூறுகையில், “நாங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பதில் பெருமையடைகின்றோம்.

இந்தப் போராட்டத்தில் சிங்கள ஆசிரியர்கள், அதிபர்கள் கல்விசார் ஊழியர்கள் ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளார்கள். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆகவே, சுகயீன விடுப்பு அறிவித்து இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைத்து பிரிவினரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

இதுகுறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஆசிரிய கல்வியியல் காங்கிரஸின் பொறுப்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவிக்கையில், “இன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையினை ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதி ஆசிரியர் தொழிற் சங்கங்கள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

எனவே, தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கமைய ஆசிரியர், அதிபர்கள் சுகயீன விடுப்பு கோரி இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம், பெற்றோர்கள் நாளை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்வதோடு நேற்று பல தரப்பினர் எம்மிடம் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி, முச்சக்கரவண்டி சங்கங்கள், தனியார் பேருந்து சாரதிகள், வர்த்தகர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தினை முன்னின்று நடத்துவதற்கு முன்வந்துள்ளனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் மலையகத்தில் பூரண ஹர்த்தாலாக மாறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *