பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் நாள் திருகோணமலை நகரில் ஆரம்பித்து புல்மோட்டை இராணுவ சோதனைச்சாவடி உள்ள பகுதியை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியிலேயே யான் ஓயா பாலத்திற்கு அருகே வீதியில் வாகனங்களை காற்றுப் போக செய்ய பெருமளவு ஆணிகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆணிகளில் சிக்கி சில வாகனங்கள் காற்றுப்போன நிலையில் பேரணியை தொடர்வதில் தடையேற்பட்டுள்ளது
குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சில வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் முல்லைத்தீவிலுள்ள இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்களை குறித்த பகுதிக்கு விரையுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன், இவ்வாறான அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் திட்டமிட்டவாறு பேரணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டுள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றிருந்தாக அவர் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.