“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையின் பக்கம் நிற்பார்கள்” என அமைச்சர் உதயகம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத்தொடரடதொடர்பாக குறிப்பிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடரடபில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை இரண்டு காரணங்களிற்காக நிராகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த அறிக்கை ஆணையாளருக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அப்பாற்பட்டது. இரண்டரை பக்கங்கள் மாத்திரமே அவருக்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் காணப்படுகின்றன.
அவர் தனது அறிக்கையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இதன் காரணமாக இந்த இரண்டு காரணங்களிற்காக அரசாங்கம் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க தீர்மானித்தது. இலங்கையின் பதிலை ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்.
அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்குவது என்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் முடிவு காரணமாக இலங்கை பாதகமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இலங்கை அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இல்லாவிடில் இந்த நிலையேற்பட்டிருக்காது.
இது 1815 கண்டி பிரகடனத்தில் கைச்சாத்திட்டதை விட மோசமான விடயம் கண்டிபிரகடனம் எங்கள் இறைமையை பிரிட்டனிடம் மாத்திரம் ஒப்படைத்தது,மங்கள சமரவீர எங்கள் இறைமையை முழு தேசத்திடமும் ஒப்படைத்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையின் பக்கம் நிற்பார்கள் எங்களால் கூட்டாக உள்நோக்கம் கொண்ட சக்திகளின் சவால்களை சந்திக்க முடியும்” என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.