தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் முத்துக்குமாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்ததால் நேற்று நடைபெற முடியாமல் போன முத்துக்குமாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற்றது. முத்துக்குமாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் இன்று மாலை தொடங்கின. மாலை 3 மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இறுதி ஊர்வலம் கொளத்தூரில் தொடங்கி செம்பியம் பேப்பர் மில் சாலை வழியாக பெரம்பூர் ஜமாலியா, ஓட்டேரி பாலம், புரசை வாக்கம் நெடுஞ்சாலை வழியாக சூளை கண்ணப்பர் திடல் யானைகவுனி பாலம் வழியாக வால்டாக்ஸ் சாலை சென்று மூலக் கொத்தளத்தில் மொழிப் போர் தியாகிகள் நினைவிடத்தை சென்றடைகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் ஊர்வலப் பாதை நெடுகிலும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. பெருமளவில மக்கள் அணிவகுத்து வந்ததால் மிக மிக மெதுவாக இறுதி ஊர்வலம் நகர்ந்தது.மூலக்கொத்தளத்தில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இறுதி ஊர்வலத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.