“எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை நானே நீக்கினேன்” – காரணத்தை கூறினார் அமைச்சர் சரத் வீரசேகர

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை நானே நீக்கினேன்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான தமிழ்பேசும் சமூகத்தின் நீதிக்கான பேரணி பல்வேறு தடைகளைத் தாண்டி நேற்றுமுன்தினம் மாலை பொலிகண்டியில் வெற்றியுடன் நிறைவடைந்தது.

இந்தப் பேரணியின் ஆரம்பத்தில் இருந்து நிறைவு வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் த.கலையரசன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர். இவர்களில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை நேற்றுமுன்தினம் இரவு திடீரென மீளப்பெறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட எஸ்.டி.எவ். பாதுகாப்பை தாமே நீக்கினார் எனவும், எதற்காக நீக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு எஸ்.டி.எவ். பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது. எனவே, அவருக்கு எஸ்.டி.எவ். பாதுகாப்பு எதற்கு?” என்று அவர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பினார்.

2014ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய மூன்று தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சிங்களப் பாதாள உலகக் கோஷ்டியினர், தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என 30 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தற்போதும் 6 இற்கும் அதிகமான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் சந்தேகநபர்கள் பலர் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *