பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 1000 ரூபா சம்பள உயர்வு அறிவிப்பின் பின்னணியிலுள்ள நிபந்தனைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழி அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் சம்பள நிர்ணயசபை ஊடாக தற்போது அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவும், வாழ்வாதார கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. இது பெரும் வெற்றி என ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மார்தட்டுகின்றனர்.
இதற்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 750 ரூபா வழங்கப்பட்டது. கூட்டு ஒப்பந்தத்தில் வருடம் 300 நாட்கள் வேலை வழங்கப்படவேண்டும் என்ற ஏற்பாடு இருந்தது. இதன்மூலம் வருடாந்தம் 2 இலட்சத்து 25 ஆயிரத்தை தோட்டத் தொழிலாளர்கள் உழைத்தனர். ஆனால் தற்போது 13 நாட்களே வேலை வழங்கப்படவுள்ளது.
வருடத்தில் 156 நாட்கள். அப்படியானால் வருடம் 1 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாவையே அவர்களால் உழைக்க முடியும். இதன்படி 69 ஆயிரம் ரூபாவை அவர்கள் இழக்கின்றனர்.
அதுமட்டுமல்ல கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களுக்கு 28 சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அவையும் தற்போது இல்லாமல் போகப்போகின்றன.
ஆயிரம் ரூபா வழங்குவது நல்லது. அதேபோல் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்படவேண்டும்” என்றார்.