மக்களை அச்சுறுத்தும் வகையில் இரு டிபென்ட்டர் வாகனங்களில் ஆயுததாரிகள் மாத்தளை பிரதேசத்தில் நடமாடி வருவதை ஐக்கிய தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இத்தகவலை தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க,ஆயுதங்களுடன் இந்த வாகனங்களில் பயணம் செய்பவர்கள் சோதனைச் சாவடிகளில் ஆள் அடையாளத்தைக் காட்டி விட்டு அச்சமின்றிச் செல்கின்றனர் என்றார்.
தம்புள்ள வீதியில் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் வீட்டுக்கு முன்னாள் பொலிஸ் அனுமதியின்றி வீதித் தடைகள் போடப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாகனங்களில் செல்வோர் அடையாளம் காணப்படுகின்றனர். மத்திய மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி எனத் தெரிந்து கொண்ட பின் அதனைத் தடுப்பதற்காக இவ்வாறு அரசு நடந்து கொள்கின்றது.
மகிந்த சிந்தனையை மத்திய மாகாண மக்கள் புறக்கணித்து விட்டனர் என்பதையே தேர்தல் நிலைமைகள் வெளிப்படுத்துகின்றன. வடக்கே யுத்தத்தில் 98 சதவீத வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் மீதி 2 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் அரசு கூறி வருகிறது. கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு இயல்பு நிலைமையை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே மீதி 2 சதவீத வெற்றியை அரசு பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
வடக்கில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு வருகின்ற போதும் தெற்கில் அரச பயங்கரவாதம் தலைதூக்கும் நிலைமை தோன்றியுள்ளது என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.