“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இலங்கை அரசின் தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும், சர்வதேசத்திடம் நீதி கோரியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட பேரணியின்போது தமிழ் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அவர்கள் அவ்வாறு கோரிக்கைகளை முன்வைப்பதற்கான நிலையை ஏற்படுத்தியமைக்கு ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, தமது கடந்த ஆட்சியில் ஐ.நாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் தமிழர்கள் இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்க வேண்டிய நிலை வந்திருக்கமாட்டாது.
இந்த ஆட்சியிலும் அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச, தனது ஜனாதிபதி பதவியைத் துஷ்பிரயோகப்படுத்தி வருகின்றார்.
சிவில் நிர்வாகச் செயற்பாடுகளின் உயர் பதவிகளில் இராணுவத்தினரை நியமித்துள்ளதுடன் மட்டுமன்றி வடக்கு, கிழக்கில் தமிழர்களைப் பழிவாங்கும் வகையிலும் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறான மோசமான செயற்பாடுகளே தமிழர்களைத் கொதித்தெழ வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.