இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் தீவுகளை சீனாவுக்கு வழங்கினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சியை விட பெரும் மக்கள் எதிர்பலை உருவாகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று(13.01.2021) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இதை கூறியிருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு போன்றவற்றை சீனா அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த தீவுகள் இந்தியாவுக்கு அருகில் உள்ளன.
குறித்த தீவுகளில் ஏற்கனவே மின்சாரம் உள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு கையளிப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல.
இதன் மூலம் சீன ஊடுறுவல் இருக்கும். இதனால் இந்தியாவுக்கு பகையை ஏற்படுத்துவதாக அமைவதுடன் வடமாகாண மக்களும் இதனை ஏற்க மாட்டார்கள்.
தமிழ் மக்களை பொறுத்தவரை இப்பொழுது தான் மீண்டு வந்துகொண்டிருக்கிறோம். அடிப்படை உரிமைகள் கூட மக்களுக்கு வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.