“இலங்கையில் இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளே தவிர பொதுமக்கள் அல்லர் ” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படாது, மாறாக மனிதாபிமான சட்டத்தின் கீழேயே கண்காணிக்கப்பட வேண்டும்.
இந்தச் சட்டத்துக்கு அமைய விடுதலைப்புலிகளுக்கு உதவிய அனைவரும்‘விடுதலைப்புலிகள்’ என்றே கருதப்படுவார்கள். இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு ஆயுதப்போராட்டம். விடுதலைப்புலிகளுக்கென இராணுவக் கட்டமைப்பொன்று இருந்ததுடன் கடற்படை, விமானப்படைகள் என்பனவும் இருந்தன.
அத்தோடு தமக்கான தேசமொன்று அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. தொடர்ச்சியாக போராடக்கூடிய தன்மையும் அவர்களிடம் காணப்பட்டது.
மேலும் இரு நாடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையாக இல்லாது, ஒரு நாட்டுடன் நடத்தும் போராட்டத்துக்கு ஒப்பானது இந்த ஆயுதப் போராட்டம்.
இந்தப் போராட்டம் தொடர்பில் மனிதாபிமான சட்டமே நடைமுறைப்படுத்தப்படவேண்டுமே தவிர மனித உரிமை மீறல் சட்டமல்ல. அதனடிப்படையில் மனிதாபிமான சட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய அனைவருமே விடுதலைப்புலிகளே. அதன்படி இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப்புலிகளே தவிர பொதுமக்கள் அல்லர்.
இதேவேளை, இந்தச் சட்டத்தை முதலில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிந்துகொள்ள வேண்டும்- என்றார்.