“பளைப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளைச் சீன நிறுவனத்துக்கு வழங்கவே காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் யாழிலிருந்து அநுராதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது” – சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு !

பளைப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளைச் சீன நிறுவனம் ஒன்றுக்கும், சிங்கள வர்த்தகர்களுக்கும் வழங்கும் நடவடிக்கையை கோத்தபாய அரசு மேற்கொள்கிறது. இதற்காகவே, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
பளைப் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக 3,000 ஏக்கர் காணியுள்ளது. அந்தப் பகுதியில் சீன நிறுவனத்துக்கும், சிங்கள முதலாளிகளுக்கும் அரசு காணி வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி எமக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகளைப் பறிமுதல் செய்து சீனக்காரருக்கு கொடுக்க, சிங்களவர்களுக்கு கொடுக்க முன்னாயத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
பளையில், புதுக்காட்டுச் சந்திக்கு அண்மையில் தேசிய காணி அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 287 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் உள்ளன.

அதை சிங்கள முதலாளிகளுக்குக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளது. அந்தக் காணிகளை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் கேட்டும், அவர்களுக்கு வழங்காமல் சிங்கள முதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

அரசியல் பிரச்சினையில்லை, அபிவிருத்தி நடந்தால் போதும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. அபிவிருத்தியென்ற பெயரில் தமிழர்களின் காணிகளைப் பிடுங்கி சிங்களவர்களுக்கு கொடுக்கும் நடவடிக்கையைத்தான் இந்த அரசாங்கம்
மேற்கொள்கின்றது.

அரசாங்கம், இராணுவம் அனைவரும் கூட்டாக இதனைச்செய்கிறார்கள்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது.

காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்துக்கு மாற்ற முயல்வதும் இதற்குத்தான்.

இந்த மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வடக்குக்கான பிராந்திய அலுவலகம் வடமத்திய மாகாணத்துக்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

பளையில் சீனா அல்லது வேறு நிறுவனங்களுக்கு காணி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காணி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு காணி வழங்காமல் சீனா,சிங்களவர்களுக்கு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இனிவரும் நாட்களில் பெரும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டிய சூழலுக்கு அரசு தள்ளுகிறது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *