“இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிக்க முடியும். அதில் எந்தப் பிரச்சினையுமில்லை. இலங்கையின் மரபுரிமைகள், கலாசாரங்கள், விழுமியங்கள், தத்துவ விசாரங்களை பாதுகாக்க கூடிய அரசியல் முன்னெடுப்புக்கள் எதுவானாலும் அதற்கு எனது ஆதரவை வழங்குவேன்” என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.
இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் போது,
தற்போதுள்ள தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பது போல, அந்த கட்சியை இலங்கையில் ஆரம்பிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் பௌத்த மதத்தை இலங்கைக்குள் அனுமதிக்க முடியுமாக இருந்தால் இதனையும் அனுமதிக்க முடியும் என்று கூற வேண்டும். ஏனெனில் பௌத்தமும் இந்தியாவில் இருந்து வந்ததே எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில்,
இலங்கைப் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும் நோக்கம் இலங்கையில் உள்ள இந்துத்துவ வாதிகளுக்கு உண்டு. நான் இதை உறுதி செய்கிறேன்.
இந்தியாவிலுள்ள கட்சிகளின் பெயரை இலங்கையில் பெயராக்கிக் கட்சி தொடங்குவது புதிய செய்தியல்ல. இந்தியாவின் விடுதலை இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் வெற்றிகரமான செயலைப் பார்த்துக் கொழும்பில் சிங்களவரும் தமிழரும் இணைந்து உருவாக்கியது இலங்கைத் தேசிய காங்கிரஸ்.
ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் மகாத்மா காந்தியடிகளை வரவேற்ற அமைப்பு யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ். பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை புறக்கணிக்குமாறு அரசியல் நடத்தியதும் அதே காங்கிரஸ். ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு வந்து மலையகத் தமிழருக்காக அமைப்பு உருவாக்கியபோது அதே காங்கிரஸ் பெயரை வைத்தார். பெயர் இலங்கை இந்திய காங்கிரஸ் ஜி.ஜி பொன்னம்பலம் அதே காங்கிரஸ் பெயரை வைத்து தமிழர்களுக்காகக் கட்சி தொடங்கினார். பெயர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்.
ம.பொ.சிவஞானம் தமிழகத்தில் அமைத்த தமிழரசுக் கழகத்தின் பெயரிலேயே தமிழரசுக் கட்சியை உருவாக்கியதாக அக்காலத்திலேயே எஸ்.ஜே.வி செல்வநாயகம் மீது குற்றம் சாட்டினர். திராவிட முன்னேற்றக் கழகத்தை இலங்கையில் அமைத்தவர் கொழும்பில் வாழ்ந்த மணவைத்தம்பி. எம். ஜி. ராமச்சந்திரன் தமிழகத்தில் அண்ணா தி.மு.க அமைப்பைத் தொடங்கிய உடனேயே யாழ்ப்பாணத்தில் இலங்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்தவர் கொட்டடியில் வணிகரான நண்பர். மதிமுகராசா.
இலங்கையில் உள்ள புத்த மரபுகள், சங்கங்கள் யாவும் இந்தியாவை அடியொற்றி அமைந்தன. முதலில் புத்தர் வந்தார். பின்னர் அசோகன் வந்தார். இலங்கை வரலாறு ஒருவகையில் இந்தியப் பண்பாட்டு ஊடுருவலின் வரலாறே.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.