ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு குறித்த துறைசார் கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவை தம்மால் ஏற்க முடியாது என பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுவாட்டிய தேவாலயத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே பேராயர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஸ தலைமையிலான குறித்த குழுவை ஜனாதிபதி நேற்றைய தினம் நியமித்திருந்தார்.
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஸ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு அறிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அந்த குழுவிற்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அந்த அறிக்கையின் பிரதிகளை தமக்கு வழங்குமாறு பேராயரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த புதிய குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே கட்டுவாட்டிய பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.