“உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் முக்கியதாரி சஹ்ரான் ஹாஷிம் 2018ஆம் ஆண்டு நடத்திய தீவிரவாதம் குறித்த பாடங்களில் கலந்துக்கொண்ட 15 பெண்களில் 5பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும் மீதமுள்ள பெண்கள் தற்போது விளக்கமறியல் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சஹ்ரான் ஹாசிமின் தீவிரவாதம் குறித்த பாடங்களில் கலந்து கொண்டதற்காக மாவனெல்லாவைச் சேர்ந்த 24 வயதான முகமது இப்ராஹிம் சைதாவை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது மூளைச்சலவை பாடங்கள் 2018 டிசம்பரில் காத்தான்குடி பகுதியில் சஹ்ரானால் நடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் தம்முடன்; 15 பெண்கள் பாடங்களில் கலந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
அவர்களில் 5பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 26, 2019 அன்று சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதாக கைதுசெய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சஹ்ரான் கற்பித்த பாடங்களால் வழிநடத்தப்பட்ட பெண்கள், எந்த நேரத்திலும் அதிக ஆபத்தான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் தயாராக இருந்தார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.