“தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம்” – விநாயகமூர்த்தி முரளிதரன்

“தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம்” என மஹிந்த ராஜபக்சவின் மட்டக்களப்பு அம்பாறை விசேட இணைப்பு செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

நேற்று அம்பாறை மாவட்டத்திற்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர், இரவு கல்முனை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம். அந்த வகையில் திருக்கோவில் பாலக்குடா பகுதியில் நீண்டகாலமாக பேருந்து சேவை இல்லாமல் இருந்தது. தற்போது பேருந்து ஒன்றினை வழங்கி அச்சேவையை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

600 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு பனம் பொருள் உற்பத்தி தொடர்பில் ஒரு வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். குறிப்பாக தம்பட்டை திருக்கோவில் தாண்டியடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள நிலையங்களைச் சென்று பார்வையிட்டோம்.

அங்கு சிறந்த முறையில் இவ்வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. பனம் உற்பத்தி பொருட்களை பெண்கள் மிக சிறப்பாக உற்பத்தி செய்கின்றனர். ஒவ்வொரு குடும்ப பெண்களுக்கும் மாதாந்தம் ரூபா 3000 நிதி வழங்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.

இது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த திட்டமாக ஆரம்பித்து வைத்துள்ளோம். வெளிநாடுகளில் இந்தப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தற்போது ஏற்படுத்தியுள்ளோம். இதனூடாக கணவனை இழந்த பெண்கள் கூடுதலான பலன்களை அடைவார்கள்.

இது தவிர தலைநகரில் இரு வாரங்களாக, அனைத்து அமைச்சுக்களுக்கும் சென்று அவர்களை சந்தித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் எடுத்து கூறி பல வேலைத்திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம். அதில் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமாக அமைச்சர் சமல் ராஜபக்சவினை சந்தித்துள்ளோம்.

இச்சந்திப்பு சிறந்த சந்திப்பாக அமைந்திருந்தது. இச்சந்திப்பில் பிரதேச செயலக விடயம் தொடர்பான திட்டங்கள் அனைத்தும் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவருடம் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

அதற்கான செயலணியையும் உடனடியாக ஏற்படுத்தி தருவதாக கூறி இருக்கின்றார். ஆகவே இங்கு ஒன்றினை கூற விரும்புகின்றோம். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தை எந்தவிதத்திலும் விட்டுகொடுக்க மாட்டோம். தொடர்ந்தும் இத்திட்டத்தில் எமது முயற்சி தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

மிக விரைவில் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளேன். அந்த சந்திப்பில் கூட கல்முனை விடயத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதற்கான ஆவணங்களை தயார்படுத்தி வைத்துள்ளேன். கிட்டங்கி பாலம் அமைப்பது தொடர்பாக வீதி நெடுஞ்சாலை அமைச்சு செயலாளரை சந்தித்து திட்டவரைவு கையளிக்கப்பட்டுள்ளது. விரைவாக இப்பால நிர்மாணத்திற்கான தொழிநுட்ப ஆய்வுக்குழுவினை அனுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

இது தவிர குடிநீர் பிரச்சினை வேலைவாய்ப்பு தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக மாதம் ஒன்றிற்கு இரு குழுக்களை அனுப்பி வைக்குமாறு என்னிடம் பிரதமர் கேட்டிருக்கின்றார்.

அதனடிப்படையில் கிராம தலைவர்கள் புத்திஜீவிகளை அங்கு அனுப்பவதற்கு திட்டமிட்டுள்ளோம். பிரதமரிடம் எமது பிரதேச குறைபாடுகள் குறித்து நேரடியாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இது போன்று பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர் யுவதிகள் இருக்கின்றார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து சகல அமைச்சுக்களையும் சந்தித்துள்ளேன். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இதற்கான வாய்ப்புக்கள் வருகின்றன. கட்டங் கட்டமாக இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

அது மாத்திரமன்றி இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தோம். இச்சந்திப்பில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கவுள்ளதாக குறிப்பிட்டனர். இதனூடாக காரைதீவு திருக்கோவில் வைத்தியசாலையை நவீன தொழிநுட்பத்துடன் புனரமைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் 300 மில்லியன் நிதி வரவுள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *